கோலாலம்பூர்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ் மலேசியாவில் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ர்ந்தவர் ரக்ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6 வது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அந்த போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2 வது இடத்தை பிடித்தார்.
அதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகள், சினிமாக்களில் பல்வேறு பாடல்களை பாடி தற்போது முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் இவர் விபத்தில் சிக்கி இருக்கிறார். மலேசியாவுக்கு சென்று இருக்கும் இவர் காரில் செல்லும்போது விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்து இருக்கிறது.
இதில் காரில் பயணித்த பாடகி ரக்ஷிதா உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி ரக்ஷ்தாவே ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், “இன்று மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கினேன். இன்று காலை மலேசியா விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டு இருந்தோம்.
அப்போது நான் சென்ற கார் சாலை தடுப்பின்போது மீது மோதி அதே வேகத்தில் சாலை ஓரத்தில்போய் விழுந்தது. அந்த சில நொடிகளில் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் தோன்றின. ஏர் பேகுகளுக்கு நன்றி. நடந்த நிகழ்வில் இருந்து மீளாமல் இன்னும் நான் அதிர்ச்சியில் உள்ளேன். கார் ஓட்டுநர் மற்றும் என்னுடன் காரில் வந்த சக பயணிகளும் இந்த விபத்தில் இருந்து தப்பினர்.
அவர்களுக்கு வெளியில் லேசான காயங்கள், லேசான உள் காயங்களும் உள்ளன. நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். நன்றி.” என்று பதிவிட்டு இருக்கிறார். ரக்ஷிதாவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் பொதுமக்கள் பலரும் ஆறுதலாக கருத்திட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1998 ஆம் ஆண்டு பிறந்த ரக்ஷிதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பாக ETV கன்னடா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரிதம் ததீம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். அதேபோல் 2009 ஆம் ஆண்டு ஏசியாநெட் சுவர்னா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லிட்டில் ஸ்டார் சிங்கர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்று இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகளில் விருப்பமான பாடகிக்கான விருதை ரக்ஷிதா வென்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி கிளாசிட், மெல்லிசைகளை நன்கு கற்ற ரக்ஷிதா தற்போது முன்னணி இசையமைப்பாளர்களின் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவர் பாடி வருகிறார். இவர் பாடிய முதல் பாடல் இளையராஜா இசையில் தெலுங்கில் விளையான எவடே சுப்ரமணியம் என்ற படத்துக்கானது.
அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் பாடியுள்ளார். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் ரக்ஷிதாவின் குரல் ஒலித்து உள்ளது. இவர் விரைந்து நலம்பெற ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.