புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்தனர். அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியிலுள்ள காடுகளில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மாதம் 20-ம் தேதி, 5 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதக் குழுவினர் கண்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்த உளவுத் துறையின் தகவலின்படி, ரஜோரி மாவட்டத்தின் கண்டி காடுகள் மற்றும் குகைகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் கூட்டு நடவடிக்கை வியாழக்கிழமை ராணுவத்தினரால் தொடங்கப்பட்டது.
தேடுதல் குழுவினர் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தீவிரவாதிகளை நேருக்கு நேர் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ராணுவத்தினரிடமிருந்து தப்பிப்பதற்காக தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஓர் அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்த ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மூலமாக உதம்பூர் ராணுவ முகாம் மருத்துவமனைக்கு சிசிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கிடைத்த முதல் தகவல்கள், தீவிரவாத குழுவினர் சிலர் பிடிபட்டுள்ளனர்; அவர்களில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரஜோரி மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.