தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்களில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது குறித்து கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
அப்போது இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ரேஷன் கார்டு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இதே நடைமுறையில் ரேஷன் கார்டு தொலைந்தாலும் நகல் வழங்க வேண்டும்.
மேலும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மற்றும் கருவி மூலம் ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் கோடு ஸ்கேன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டிற்கு மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படும் நிலையில் ஆனால் மத்திய அரசு 8 டன்னாக குறைத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் முதல் கட்டமாக நீலகிரி கோவை கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.