சென்னை: மியான்மர் நாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். ஆனால், மியான்மருக்கும், தமிழகத்துக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம் யங்கூன் – சென்னை – யங்கூன் இடையே புதிய விமான சேவையை தொடங்கியது. யங்கூனில் இருந்து 48 பயணிகளுடன் புறப்பட்டு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த விமானத்துக்கு தண்ணீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், அதே விமானம் சென்னையில் இருந்து 78 பயணிகளுடன் யங்கூனுக்கு புறப்பட்டது. வாரம்தோறும் சனிக்கிழமை இந்த விமான சேவை செயல்படும். யங்கூனில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 10.15 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து மீண்டும் 11.15 மணிக்கு புறப்பட்டு யங்கூனுக்கு செல்கிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த விமான சேவையை மேலும் அதிகரிக்க விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.