புதுடெல்லி: முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் வாயிலாக விவாகரத்து செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் முஸ்லிம் ஆண்கள் விவாகரத்து பெற தலாக் – இ – ஹசன் என்ற மற்றொரு நடைமுறையும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதன்படி மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத முஸ்லிம் ஆண்கள், மூன்று மாதங்களில், மாதத்துக்கு ஒருமுறை மனைவியிடம் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ தலாக் கூற வேண்டும். 3வது மாதம் தலாக் கூறும்வரை கணவன், மனைவி இடையே சமாதானம் ஏற்படவில்லை என்றால் விவாகரத்து வழங்கப்படும்.
இந்த தலாக் – இ – ஹசன் விவாகரத்து நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெனாசீர் ஹுனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பர்திவாலா அமர்வு முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பெனாசீர் ஹுனா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜரானார். அவர் கூறும்போது, “தலாக் -இ – ஹசன் நடைமுறையில் பெனாசீர் ஹுனாவை விவகாரத்து செய்த கணவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை” என்று வாதிட்டார்.
கணவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாம்சாத் கூறும்போது, “பெனாசீர் ஹுனாவின் வருமான விவரங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் இதுவரை வருமான விவரங்களை தாக்கல் செய்யவில்லை. தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தை பொதுநல மனுவாக அவர் தாக்கல் செய்திருக்கிறார்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: பெனாசீர் ஹுனா, அவரது கணவரின் திருமண பந்தம் முறிவு குறித்து விசாரிக்க நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்ற வரம்பை தாண்டிய தலாக் – இ -ஹசன் நடைமுறை செல்லுமா என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கில் பெனாசீர் ஹுனாவின் கணவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற உத்தரவிடுகிறோம்.
தலாக் – இ -ஹசன் விவகாரத்து நடைமுறையை எதிர்த்து பெனாசீர் ஹுனா உட்பட 8 பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதே விவகாரம் தொடர்பாக வேறு பெண்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனரா என்பது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
கருத்து கூறலாம்: தலாக் – இ – ஹசன் விவகாரத்து நடைமுறை தொடர்பாக மத்திய அரசு, தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்களது கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கனு அகர்வால் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி தலாக் – இ -ஹசன் நடைமுறை தொடர்பாக முஸ்லிம் பெண்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து விரிவான பட்டியல் தயாரித்து சமர்ப்பிப்பேன்” என்று உறுதி அளித்தார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.