திமுக ஆட்சியின் 2 ஆண்டுகள் எப்படி இருந்தது? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் இதோ!

முதல்வர்

தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 7) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையடுத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் 2 Years of Dravidian Model என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும் விமர்சனங்களும் விட்டு வைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகள் குறித்து மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதற்கு ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திமுக ஆட்சியின் சாதனைகளாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், விவசாயிகள் நலன், மக்கள் நல்வாழ்வு, வேலைவாய்ப்பு முகாம்கள், ஊரக வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம், பால் வளம், போக்குவரத்து, விளையாட்டு மேம்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திமுக ஆட்சியின் மேற்கொண்ட நடவடிக்கைகளாக தமிழகம் அல்ல தமிழ்நாடு, மத்திய அரசு அல்ல ஒன்றிய அரசு, உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை, தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் கீழடி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய வரலாறு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் இன்று முதல் 3 நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய சிறப்புக்குரிய நாளில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து திரும்பும் போது செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு, விமர்சனத்தை பற்றி நாங்கள் இம்மி அளவும் கவலைப்பட்டது இல்லை. நல்லதை எடுத்துக் கொள்வோம். கெட்டதை புறந்தள்ளி விடுவோம். ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு இதே இடத்தில் உங்கள் எல்லாரையும் சந்தித்து பேசினேன். இந்த ஆட்சி என்பது ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமின்றி. ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து தான். ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் என்னுடைய ஆட்சி இருக்கும் என்று சொன்னேன். அந்த அடிப்படையில் தான் ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் எப்படி இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ, அதேபோல் இந்த மூன்றாவது ஆண்டிலும், ஒவ்வொரு ஆண்டிலும் உங்களிடம்ம் இருந்து எதிர்பார்க்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.