திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை பெண் ஒருவர் தனியாக வழிமறித்து நிறுத்தி ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் மகளிர் இலவச அரசுப் பேருந்து மண்மலை பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார். அந்தப் பெண் நடத்துனரிடம் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது.
இது என்ன உங்கள் வீட்டு பேருந்தா.? என நடத்துனரிடம் கேள்வி எழுப்பி வெளுத்து வாங்கியுள்ளார். இலவச பேருந்தில் பெண்களை ஏற்றினால் தங்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை என பேருந்து ஓட்டுநர்கள் கூறுவதாகவும், பெண்களை இழிவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.