சிவகங்கை: நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து 2 ஆண்டுகளாகியும் சிவகங்கை சிப்காட் திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை தொழில் வளர்ச்சி இல்லாத, பின்தங்கிய பகுதியாக உள்ளது. இதையடுத்து சிவகங்கை அருகே அரசனூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என 9 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சிப்காட் வளாகத்துக்காக முதலில் 1,451 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மொத்தம் 775.79 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது. இதில் இலுப்பைக்குடி வருவாய் கிராமத்தில் 605.39 ஏக்கர், கிளாதரி வருவாய் கிராமத்தில் 62 ஏக்கர், அரசனூர் வருவாய் கிராமத்தில் 108.40 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இப்பணி முடிவடைந்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் நிர்வாகத்திடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த 2021-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசனூர் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அதன்பிறகும் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் சிவகங்கை பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூகஆர்வலர் சண்முகம் கூறியதாவது, “சிவகங்கை பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை போன்ற திட்டங்களுக்காவது நிதி ஒதுக்கி உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், சிப்காட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்ததும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.