ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு மூன்றாவது ஆண்டில் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் இடங்களில் பல மாற்றங்களை கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சில நாட்களாகவே பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அந்த வகையில் முக்கிய துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சரவையில் மாற்றங்கள், துணை முதலமைச்சர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை அவர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரு மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு ஆகியோர் ஒய்வு பெறவுள்ளனர். இதனால் புதிய உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் பி.ஏ.தினேஷ் ஆகியோருடன் ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது செயலாளர் உதயச்சந்திரன் ஸ்டாலினிடம் நிதியமைச்சர் பி.டி.ஆருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சரை நியமித்தால் நிதிச் செயலாளராகப் பொறுப்பேற்பேன் என கூறியதாகவும் அதுகுறித்து அமைச்சர் தென்னரசுவிடம் கேட்டபோது அவருக்கு இலாகா மாற்றத்துக்கு உடன்பாடில்லை என தெரிவித்ததாத கூறப்படுகிறது.
முக்கியமாக இந்த பேச்சு வார்த்தையின் போது சபரீசன் இல்லையென்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது ஓபிஎஸ்-ஐ சபரீசன் சந்தித்தது முதல்வர் குடும்பத்தார் விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால் அமைச்சர் மாற்றம், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட முடிவுகள் சபரீசனின் தலையீடு இல்லாமல் நடப்பதாகவும் தலைமை செயலக வட்டாரத்தில் வரும் தகவல். அதே சமயம் நிதி அமைச்சர் மாற்றத்துக்கு தென்னரசு இசைவு கொடுக்காததால் அமைச்சரவை மாற்றத்தில் குழப்பம் நிலவுகிறதாம்.
அமைச்சர் பிடிஆர் காட்டி வரும் கெடுபிடியால் அவர் மீது பால்துரை அமைச்சர்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக பொதுவான பேச்சு உள்ளது. இந்த சமயத்தில், அவர் பேசியதான ஆடியோ வெளியாகி அவரை கடும் நெருக்கடிக்கு தள்ளியது. கூடிய விரைவில் நிதி அமைச்சராக தென்னரசு மாற்றப்பட்டு பிடிஆருக்கு வேறொரு துறை வழங்கப்படலாம் என்றெல்லாம் ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில், நிதி அமைச்சராக பொறுப்பேற்க வற்புறுத்தியும் தென்னரசு அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.