வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன்,52, நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை உட்பட பல்வேறு பிரிவுகளின் ஆலோசகராக பணியாற்றி வந்த சூசான் ரைஸ் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியான நீரா டாண்டனை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இது குறித்து ஜோ பைடன் கூறியுள்ளதாவது:
பொருளாதாரம் மற்றும் இனச் சமத்துவம் முதல், சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம் மற்றும் கல்வி வரை, என் அரசின் உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நீரா டாண்டன் தீவிரமாக செயல்படுவார்.
வெள்ளை மாளிகையின் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஒன்றை வழிநடத்தும் முதல் ஆசிய- – அமெரிக்கராக டாண்டன் இருப்பார்.
அவர் பொதுக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் 25 ஆண்டுகள் அனுபவமிக்கவர். மூன்று அதிபர்களிடம் பணிபுரிந்து உள்ளார்.
இந்த அனுபவம், என் நிர்வாகத்திற்கும், அமெரிக்க மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்ய துாண்டுதலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொள்கை ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள டாண்டன், தற்போது ஜோ பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளின்டன் ஆகியோரின் நிர்வாகத்திலும், அவர்களின் பிரசாரம் மற்றும் சிந்தனைக் குழுக்களிலும் பணியாற்றி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement