இம்பால்: மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து கோரும் மேதே சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அந்த மாநிலத்தில் 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் மேதே சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இதற்கு பதிலடியாக மேதே சமுதாய மக்களும் வன்முறையில் இறங்கினர். மாநில போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டது.
கடந்த 4 நாட்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3-ம் தேதி முதல் இதுவரை கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாகி உள்ளன.
மணிப்பூரில் ஜிரிபாம் பகுதியை சேர்ந்த 1,100 பேர் அண்டை மாநிலமான அசாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த முங்பு கூறும்போது, “கடந்த 4-ம் தேதி காலையில் எங்கள் பகுதியை வன்முறை கும்பல் தாக்கத் தொடங்கியது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வேறு வழியின்றி சுமார் 1,100 பேர் அங்கிருந்து தப்பி அசாமில் தஞ்சமடைந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மணிப்பூரில் பதற்றம் நீடிப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், போலீஸாரின் நடவடிக்கைகளால் மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: மணிப்பூர் கலவரத்தில் நாகா, குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பிருப்பதாக மாநில போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் சாய்டோன், டார்பாங் ஆகிய பகுதிகளில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு நடத்திய என்கவுன்ட்டர்களில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கலவரத்தின்போது பாதுகாப்பு படைகளின் ஆயுதங்களை ஒரு தரப்பினர் சூறையாடிச் சென்றனர். அந்த ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரின் மோரே நகரில் சுமார் 20,000 தமிழர்கள் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தில் தற்போது வெடித்திருக்கும் கலவரத்தில் மோரே நகரம் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த நகரில் இருந்து சுமார் 2,000 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு மோரேவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து கட்சி கூட்டம்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் தலைநகர் இம்பாலில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.