இம்பால்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுவரை அங்கிருந்து 23 ஆயிரம் வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் மீண்டும் கலவரஙகள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில் இந்த ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கூறுகையில், மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக போராடும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை எட்டத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
கலவரத்தின் பின்னணி என்ன? மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது. அதேநேரத்தில் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் முடக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரின் குவிக்கப்பட்டுள்ளனர்.