பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை பார்த்து பாஜக கலக்கம் அடைந்துள்ளதாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா முதல் முறையாக ஹுப்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:
நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைப்பதையே சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகவே ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். வெறுப்பை விதைப்பவர்களால் கர்நாடகாவுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. வளர்ச்சி, அமைதி ஆகியவற்றை ஏற்படுத்த முடியாது.
ராகுலின் பாத யாத்திரைக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதைக் கண்டுபாஜகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதம் குறித்து காங்கிரஸ் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பாஜகவினர் பதில் அளிக்க மாட்டார்கள். ஜனநாயக மதிப்பீடுகள் தங்களின் சட்டை பையில் இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள்.
பாஜக அரசின் ஊழல், வெறுப்பு கலாச்சாரம், மோசடி ஆகியவற்றில் இருந்து விடுபட்டால் மட்டுமே கர்நாடகா முன்னேற முடியும். இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால் பிரதமர் மோடியின் ஆசி கர்நாடகாவுக்கு கிடைக்காது என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு கர்நாடக மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள். இந்த மிரட்டலுக்கு அஞ்சும் அளவுக்கு மக்கள் அவ்வளவு கோழைகள் அல்ல என்பதை பாஜகவினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து, நல்லாட்சி வழங்க காங்கிரஸை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.