தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மே மாதம் முழுவதும் வண்டலூர் பூங்கா இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் பூங்காவில் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், அந்த நாட்களில் அரசு விடுமுறை அல்லது சிறப்பு நாளாக இருந்தால் விடுமுறை ரத்து செய்யப்படும்.
பராமரிப்பு காரணங்களுக்காக விடப்படும் அந்த விடுமுறை மக்கள் வருகைக்காக ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மே மாதம் முழுவதும் வண்டலூர் பூங்கா இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் இந்த மாதம் முழுவதும் வாரத்தில் எந்த நாட்களிலும் பூங்காவுக்கு சென்று வரலாம்.
முக்கிய விஷயமாக வண்டலூர் பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லயன் சபாரி கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கிய அம்சமாக லயன் சபாரி இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளாக லயன் சபாரி மூடப்பட்டது. அதேபோல, வண்ணத்துப்பூச்சி பூங்கா, குழந்தைகள் பூங்கா, அக்குவாரியம் மற்றும் இரவு நேர விலங்கு வீடு போன்ற பார்வையிடங்களும் மூடப்பட்டன.
தற்போது கோடை விடுமுறை முன்னிட்டு மேற்கண்ட அனைத்து சேவைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. லயன் சபாரிக்கான வாகன போக்குவரத்து பணிகள் நடந்து வருகின்றன. கடந்த மே தினம் அன்று மட்டும் வண்டலூர் பூங்காவிற்கு 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.