விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறு வயது முதலே பாடத் தொடங்கி தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார் ரக்ஷிதா சுரேஷ்.
சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ ஆகிய பாடல்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இது தவிர ஏஆர் ரஹ்மான் இசைக் கச்சேரி பலவற்றில் பாடி புகழ்பெற்றவர். அவ்வப்போது வெளிநாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் இவர், அண்மையில் இசை நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், விமான நிலையத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் ஏர் பேக்குகளுக்கு சரியாக செயல்பட்டதால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா சுரேஷ், “இன்று காலை நான் மலேசியாவில் உள்ள விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் சென்ற கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி சாலையோரத்தில் விபத்துக்குள்ளாகியது. அந்த 10 விநாடிகளில் என் முழு வாழ்க்கையும் மின்னல் போல என் கண் முன்னால் வந்து சென்றது. ஏர் பேக்குகள் இருந்ததால் தப்பித்தோம். ஏர் பேக்குகளுக்கு நன்றி. அவை இல்லையெனில் நிலைமை மோசமாக இருந்திருக்கும். நடந்த சம்பவத்தை நினைத்து இன்னும் என் உடல் நடுங்குகிறது. ஆனால் நானும் ஓட்டுநரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற சக பயணிகளும் சிறிய வெளிப்புற காயங்கள், சில உள் காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். உயிருடன் பிழைத்தது எங்கள் அதிர்ஷ்டம், நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.