மும்பை: Aishwarya Rai Net Worth (ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு) உலக அழகி பட்டம் வென்று பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பெங்களூருவை பூர்வீகமாகக்கொண்டவர் ஐஸ்வர்யா ராய். கட்டட பொறியாளரான இவரது தந்தைக்கு மும்பைக்கு பணி மாறுதல் கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். ஐஸ்வர்யா ராய் பள்ளி, கல்லூரி படிப்பை மும்பையிலேயே முடித்து மாடலிங்கில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரை மேலும் புகழடைய செய்தது. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் திரையுலகில் 1997ஆம் ஆண்டு அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.
முன்னணி நடிகையாக ஜொலித்த ஐஸ்வர்யா ராய்: மணிரத்னம் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவுர் ப்யார் ஹோ கயா என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார். இந்தப் படமும் 1997ஆம் ஆண்டு வெளியானது. தமிழ், ஹிந்தி என ஒரே சமயத்தில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்தனர்.
தமிழில் ஐஸ்வர்யா ராய்: இருவர் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். 1998ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து தமிழில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் தனது கவனத்தை ஹிந்தி பக்கம் திருப்பினார். இதனால் தமிழில் நடிப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார்.
தமிழில், ஜீன்ஸ் படத்துக்கு பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு வெளியான ராவணன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில்தான் நடித்தார்.
திருமண செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்: இதற்கிடையே ஐஸ்வர்யா ராய் நடிக்க ஆரம்பித்த புதிதில் சல்மான் கானை காதலித்துவந்தார். ஆனால் சில காரணங்களால் அவர்களது காதல் பிரிவில் முடிந்தது. இதனையடுத்து அவர் அபிஷேக் பச்சனை காதலித்தார். இருவரும் தீவிரமாக காதலித்துவந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்: தமிழில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்த சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் அவர் நந்தினிக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அழகும், விஷமும், வன்மமும் ஒரு சேர வெளிப்படுத்தும் வகையில் கல்கி உருவாக்கியிருந்த நந்தினி கதாபாத்திரத்தை அச்சு பிசகாமல் திரையில் கொண்டுவந்தார். அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு: இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஐஸ்வர்யா ராய்க்கு பல பங்களாக்கள், நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்திருக்கிறார்.மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 776 கோடி ரூபாய் என தகவல் கசிந்திருக்கிறது.