சென்னை: Big Boss Azeem (பிக்பாஸ் அசீம்) பிக்பாஸ் ஆறாவது சீசனில் டைட்டில் வென்ற அசீம் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு சீசனையும் மக்கள் விரும்பி பார்த்தாலும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 பெரும் விவாத பொருளானது. வாரா வாரம் ஏதேனும் ஒரு சண்டை நடந்ததால் மக்கள் தவறாமல் இந்த சீசனை கண்டு ரசித்தனர். 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
டைட்டில் வின்னர் அசீம்: இதில் விக்ரமன் வெற்றி பெறுவார் என பெரும்பாலானோர் எதிர்பார்க்க அசீம் டைட்டிலை தட்டி சென்றார். விக்ரமனும், ஷிவினும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஆனால் அசீம் வெற்றி பெற்றதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அறம் வீழ்ந்துவிட்டது என பலர் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர்.
பிரபல்யத்தை குறையாமல் பார்த்துக்கொண்ட அசீம்: அசீம் டைட்டில் வின்னராகி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் பல பேட்டிகளை கொடுத்தார். அந்தப் பேட்டிகளில் பிக்பாஸ் வீட்டுக்குள் தான் நடந்துகொண்ட விதம் பற்றியும், எதற்காக அப்படி நடந்துகொண்டேன் என்பது குறித்தும் விரிவாகவே பேசினார். சில பேட்டிகளில் விக்ரமனையும் மறைமுகமாக சாடினார். இதனால் பிக்பாஸ் முடிந்த பிறகும் அசீம் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தார்.
திரைப்படத்தில் ஹீரோவாக கமிட்டான அசீம்: பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானாலே அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு சினிமாவை நோக்கித்தான் இருக்கும். ஆரவ்கூட சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசனில் டைட்டிலை வென்ற அசீம் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பறந்துகொண்டிருக்கிறது.
யார் இயக்குநர் தெரியுமா?: அசீம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் குறித்த தகவலும் கசிந்துள்ளது. அதன்படி அந்தப் படத்தை பொன்ராம் இயக்கவிருக்கிறாராம் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
எப்போது வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?: அசீமை வைத்து இயக்கும் படமானது பொன்ராம் ஸ்டைலிலேயே இருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி பொன்ராமும், அசீமும் இப்போது லொகேஷன் தேர்வுக்காக ராஜஸ்தானில் முகாமிட்டிருக்கிறார்களாம். இன்னும் சில வாரங்களில் அவர்கள் தமிழ்நாடு திரும்பியதை அடுத்து படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.