டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்துவருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக இருப்பவர் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா. இவர் தன்னுடைய மனைவியுடன் டெல்லியில் வசித்து வருகிறார். ராணாவின் மனைவி சாச்சி மார்வா, கீர்த்தி நகர்ப் பகுதியில் தனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரது காரை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பின் தொடர்ந்து சென்றனர். எந்தவித காரணமும் இல்லாமல், கிரிக்கெட் வீரரின் மனைவி காரை இரண்டு பேரும் பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். ஓரிடத்தில் கார் நின்றபோது, அவர்கள் இரு சக்கர வாகனத்தைக் கொண்டு மோதச்செய்தனர்.
இதனை காரிலிருந்த சாச்சி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். அதோடு இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்தார். ஆரம்பத்தில் போலீஸார் புகாரை பதிவுசெய்ய மறுத்ததாக சாச்சி குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்றுவிட்டதால், இந்தப் பிரச்னையை இத்தோடு விட்டுவிடும்படி போலீஸார் என்னிடம் கேட்டுக்கொண்டனர்” என்றும் தெரிவித்தார்.
ஆனால் சாச்சி புகாரை பதிவுசெய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்தனர். அதோடு கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விவேக், சிவம் என அடையாளம் காணப்பட்ட இருவர், அவர்களின் வீட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இது போன்ற சம்பங்கள் நடந்தால் வாகனத்தின் எண்ணை பதிவுசெய்து கொள்ளும்படி போலீஸார் கிரிக்கெட் வீரரின் மனைவியிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.