சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை (மே 8) அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்துடன், அவரது அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினைக்குப் பிறகு, ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலாவை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களைத் திரட்டி, திருச்சியில் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நெல்லை உள்ளிட்ட 5 இடங்களில் இதேபோன்ற மாநாடுகளை ஓபிஎஸ் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுப்பதற்காக, அவரை நேரடியாக சந்தித்ததாகவும், அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவது குறித்து இந்தச் சந்திப்பின்போது, ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தனது வீட்டிற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை வீட்டின் வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்று அழைத்துச் சென்றார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வி.கே.சசிகலாவையும் சந்தித்து தனக்கு ஆதரவு கோருவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.