அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு

ஐதராபாத்,

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இந்தநிலையில் வணிக வளாகத்துக்கு மாலை 3.30 மணியளவில் காரில் வந்த மர்ம நபர், கடைகளின் வெளியே நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாறியாக சுடத் தொடங்கினார்.

துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், அதே வளாகத்துக்கு மற்றொரு பாதுகாப்பு பணிக்காகச் சென்றிருந்த அலேன் நகர போலீஸ் அதிகாரி ஒருவர், எதிர் தாக்குதல் நடத்தி கொலையாளியை சுட்டுக் கொன்றார்.

இந்த சம்பவத்தில் கொலையாளி உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயும், 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 5 வயது குழந்தை உள்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பொதுமக்கள் 8 பேரில் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா தட்டிகொண்டா(வயது 27) என்பது தெரியவந்துள்ளது.

ஐதராபாத் சரூர்நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

விடுமுறை நாளான நேற்று நண்பருடன் வணிக வளாகம் சென்ற நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், ஐஸ்வர்யாவின் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் நீதிபதியின் மகள் துப்பாக்கிச்சூட்டிற்கு இரையாகி இருப்பது ஐதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குரல் எழுந்தது. எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.