டெக்சாஸ், அமெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லால் நகரில், வணிக வளாகம் ஒன்றில், மொரிசியோ கார்சியா என்ற நபர், சமீபத்தில் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில், 5 வயது குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தியதில், மொரிசியோ கார்சியா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், உயிரிழந்த எட்டு பேரில் ஒருவர், தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் பெண் ஐஸ்வர்யா, 27, என்பது தெரிய வந்துள்ளது.
ஹைதராபாதில் உள்ள சரூர் நகரைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா, இரண்டு ஆண்டுகளாக, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
ஐஸ்வர்யா நண்பருடன் வணிக வளாகத்திற்கு சென்ற போது, இச்சம்பவம் நடந்துள்ளது.
இதில், ஐஸ்வர்யாவின் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, நம் நாட்டிற்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement