தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. காலையில் தேர்வு முடிந்த பிறகு மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத வேண்டியவர்கள் 1.30 மணிக்கு உள்ளே வர வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி அரை மணி நேரத்துக்கு முன்பாகவே மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. அதன் பிறகு கால தாமதமாக வந்த 50க்கும் மேற்பட்டோரை தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காலையில் தேர்வு எழுதியவர்கள் 5 நிமிடம் தாமதமாக வந்தால் அனுமதி அளித்த நிலையில் தற்போது அனுமதிக்காதது ஏன் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்பொழுது திடீரென தேர்வர்கள் நுழைவாயில் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று தேர்வு மையத்துக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து வந்த தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்வு மையக் கண்காணிப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் 60 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.