சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 10, 14, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளின் காரணமாக, போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐபிஎல் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 10.05.2023, 14.05.2023, 23.05.2023 மற்றும் 24.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இப்போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்தினைக் கட்டுப்படுத்த, போட்டி முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
> போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா பாயின்ட் வழியாக கொடிமரச் சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.
> காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் நோக்கி உள்வரும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை அருகே திருப்பி விடப்பட்டு ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
> தொழிலாளர் சிலையில், வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மாறாக கண்ணகி சிலையை நோக்கி திருப்பி விடப்படும்.
> அண்ணா சிலை அருகே, வாகனங்கள் வாலாஜா சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது, வெலிங்டன் பாயின்ட் & பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.
> பாரதி சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில், வாகனங்கள் பெல்ஸ் சாலையை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது மற்றும் கண்ணகி சிலை (அல்லது) ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.
> பேட்டா பாயிண்டில், வெளிச்செல்லும் வாகனங்கள் “U” திருப்பம் செய்ய அனுமதியில்லை, அதற்கு பதிலாக, வாகனங்கள் வெலிங்டன் பாயிண்ட் வரை செல்ல அனுமதிக்கப்படும், அங்கிருந்து வாகனங்கள் வலதுபுறம் டேம்ஸ் ரோடு சாலையை நோக்கி ஸ்பென்சர்ஸ் சந்திப்பு நோக்கி நேராக செல்லலாம்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.