ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர் ஹுஸாமுதீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்

தாஷ்கண்ட்,

உஸ்பெகிஸ்தானில் ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் தீபக், கஜகஸ்தானைச் சேர்ந்த பிபாசினோவ் உடன் மோதினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள பிபாசினோவ், 2021 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் ஆவார்.

தொடக்கத்தில் சற்று தடுமாறிய தீபக், பின்னர் ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபக் முன்னேறியுள்ளார். அதே சமயம் மற்ற இந்திய வீரர்களான சுமித்(75 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால்(92 கிலோ) தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினர்.

இதனிடையே 57 கிலோ எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஹுசாமுதீன், ரஷிய வீரர் சவீன் எட்வர்ட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹுசாமுதீன், 5-0 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார். கால் இறுதி சுற்றில் பல்கேரிய விரர் ஜவியர் டயாஸை ஹுசாமுதீன் சந்திக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.