அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையிட்டபோதும், அதன் முடிவுகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தன. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் மக்கள் மன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசெல்வதாகக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சியில் மாநாடு நடத்தினர். அதேபோல், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த சசிகலா, டி.டி.வி.தினகரனை ஒன்றிணைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.ன்னீர்செல்வம் அணிதிரட்டப்போவதாகப் பேச்சுகளும் அடிபட்டன.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பிற தலைவர்களுடன் டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்தார். அப்போது டி.டி.வி.தினகரன் வாசலில் காத்திருந்து ஓ.பன்னீர்செல்வத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கம்ம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் இணைந்து செயல்பட முடிவுசெய்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், “எனக்கும் அவருக்கும் (ஓ.பி.எஸ்) சுயநலம் என்கிற எண்ணம் கிடையாது. அம்மாவின் உண்மையான தொண்டர்களின் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். அதைக் கபளீகரம் செய்து அரக்கர்களைப் போல செயல்படுபவர்களிடமிருந்து இயக்கத்தை மீட்டெடுத்து, தீய சக்தி தி.மு.க-வை வீழ்த்துவதற்கான முயற்சியில் நானும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்திருக்கிறோம்.
அதற்கான நேரம் வந்துவிட்டது. எங்களுக்குள் எந்தவித பகையோ வெறுப்போ கிடையாது. சுயநலத்தால் நாங்கள் இருவரும் ஒன்றிணையவில்லை. அவரை நம்பி இருட்டில்கூட நான் கையைப் பிடித்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் எடப்பாடியை நம்பிச் செல்ல முடியுமா…” என்று கூறினார்.
மேலும் சசிகலாவுடனும் சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “சின்னம்மாவைச் சந்திப்பதற்காகத் தகவல் சொல்லியிருந்தோம். தற்போது அவர் வெளியூர் சென்றிருப்பதால் வந்தவுடன் உறுதியாகச் சந்திப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். அதேபோல் வழக்குகளும் இன்னும் முடியவில்லை. அடுத்த மாநாட்டுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாளை தலைமை கழக நிர்வாகிகள் இடத்தைப் பார்வையிடுவார்கள்” என்றார்.
சபரீசனுடனான சந்திப்பு குறித்து, “ இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.