சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் ரசிகர்களும் சண்டை

சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சண்டையிட்டுக் கொள்வதைவிட சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதைதான் அதிகம். அதிலும் குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்கள்தான் அதிகம் சண்டை போடுவார்கள். ஆனால், 2022ல் வெளிவந்த 'விக்ரம்' படம் 400 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த் ரசிகர்களின் சண்டைகளையும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசன் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அதில் உடன் நடித்த விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் காரணம் என கமல் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் வம்புக்கிழுத்தார்கள்.

அதே போன்றதொரு வம்பை இப்போது கமல் ரசிகர்கள் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். கடந்த வாரம் 'ஜெயிலர்' படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வீடியோ முன்னோட்டத்துடன் வெளிவந்தது. அதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு நடிகர்களும் இடம் பெற்றிருப்பது குறித்து கிண்டலடித்து சண்டை போட்டு வருகிறார்கள்.

'விக்ரம்' படம் போன்ற 400 கோடி வசூலை லாபத்துடன் கடக்க வேண்டுமென்றால் கமல்ஹாசன் வழியைப் பின்பற்றி ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் இத்தனை நடிகர்களை நடிக்க வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு வருகிறார்கள். ரஜினி நடித்த '2.0' படம் 600 கோடி வசூல் என்று சொல்லப்பட்டாலும் அப்படம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், 'விக்ரம்' படம் பெரிய லாபத்தைக் கொடுத்தது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

'ஜெயிலர், லால் சலாம், இந்தியன் 2' ஆகிய படங்கள் வெளிவரும் போது இந்த சண்டை இன்னும் அதிகமாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.