சுவிற்சர்லாந்து சூரிச் வின்ரத்தூரில் இரு நூல்களின் வெளியீட்டுவிழா ஒரே மேடையில் நடைபெற்றது.
எழுத்தாளர் தம்பதி
திரு.குடத்தனை உதயன் மற்றும் அவர்தம் பாரியார் திருமதி.லதா உதயன் ஆகியோர் எழுதிய நூல்களே வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
குடத்தனை உதயனின் ஒரு அகதியின் நாட்குறிப்பு,லதா உதயனின் அக்கினிக் குஞ்சுகள் ஆகிய இரு நூல்களுமே வெளியீடு கண்டன.
விழாவுக்கு கலாநிதி கல்லாறு சதீஷ்(முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா) பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். லதா உதயனின் அக்கினிக்குஞ்சுகள் நூலுக்கான ஆய்வுரையை IBC ஊடகவியலாளர் குமணன் முருகேசனும், நயப்புரையை நாவலாசிரியர் மிதயா கானவியும்,ஆய்வுரையைக் கவிஞர் இணுவையூர் மயூரனும் வழங்கினார்கள்.
குடத்தனை உதயனின் ஒரு அகதியின் நாட்குறிப்பு நூலுக்கான ஆய்வுரையை பிரான்ஸிலிருந்து வந்திருந்த எழுத்தாளர் ரூபன் சிவாவும்,நயப்புரையை கவிஞர் சுகிர்தன் சுந்தரலிங்கமும், ஆய்வுரையை எழுத்தாளர் பொலிகை ஜெயாவும் வழங்கினார்கள்.
லதா உதயனின் அக்கினிக் குஞ்சுகள் நூலினைச் சிறப்பு விருந்தினர் மருத்துவர் அலன் வெளியீட்டு வைக்க செங்காளன் நகரசபை உறுப்பினர் திரு.ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.
குடத்தனை உதயனின் ஒரு அகதியின் நாட்குறிப்பு நூலினைப் பிரதம விருந்தினர் கலாநிதி கல்லாறு சதீஷ் வெளியீட்டு வைக்க உலக ஐக்கிய சிலம்ப சம்மேளத்தின் உபதலைவர் கெளரிதாசன் விபுலானந்தன் பெற்றுக்கொண்டார்.
நூலாசிரியர்களுக்கு கௌரவம்
நூலாசிரியர்கள் திரு.திருமதி உதயன் தம்பதியினரை
வின்ரத்தூர் தமிழ் மக்கள் ஒன்றியம், குடத்தனை மக்கள் ஒன்றியம்,மற்றும் கல்லாறு சதீஷ் தம்பதியினருடன் இணைந்த விருந்தினர்கள் முறையே பொன்னாடை போற்றிக் கெளரவித்தனர்.
கலாநிதி கல்லாறு சதீஷ் தனது தலைமையுரையில்
“இந்த மே மாதத்தில் அக்கினிக்குஞ்சுகள் எனும் நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமானது,காரணம் நூலுக்குள் அந்த அக்கினிக்குஞ்சுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் உரை
பின்னர் தொடர்ந்து அவர் தனது உரையில்
“ஒரு அகதியின் நாட்குறிப்பு எனும் இந்த நாவலின் ஆசிரியர் குடத்தனை உதயன் அவர்கள்,ஒரு அகதியின் ஜேர்மானிய வாழ்க்கையை அப்படியே பதிந்துள்ளார்.
பாலியல் தூண்டல்கள்தான் மனித நடத்தையின் அடிப்படைக்காரணங்களாக அமைகின்றது என்கிற உளவியலாளர் சிக்மன்ட் பிராய்டின் தத்துவத்தை அடியொற்றி ஒரு அகதியின் நாட்குறிப்பு எனும் நூல் பின்னப்பட்டுள்ளதை அவதானிக்கிறேன்.
உதயன் அவர்கள் இதுவரை மூன்று நாவல்களைப் படைத்துள்ளார்,அவர்தான் சுவிஸில் முதலாவது தமிழ் நாவலைப் படைத்த பெருமைக்குரியவர்.
அக்கினிக்குஞ்சுகள் எனும் நாவலின் ஆசிரியர் லதா உதயன் அவர்கள் இதுவரை மூன்று நூல்களைப் படைத்துள்ளார்,அவரின் சிறுகதையொன்று தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் பொருள்தான் எனும் கார்ல் மார்க்ஸின் சிந்தனையை அடிப்படையாக வைத்து லதா உதயன் அக்கினிக்குஞ்சுகளைப் படைத்துள்ளார்.
தாயகத்தின் வட,கிழக்கின் நெய்தல் நிலமெங்கும்
அக்கினிக்குஞ்சுகள் வாழ்ந்திருக்கிறார்கள்,ஆனால் அவர்களைப் பற்றி ஒரேயொரு அக்கினிக்குஞ்சுதான் நூலாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல் இன்னும் பல அக்கினிக்குஞ்சுகள் படைக்கப்படவேண்டும்.
எதிர்காலத்தில் இவர்கள் படைத்த இந்த நூல்களும்
பல்கலைக்கழகங்களில் பாடமாகும் சாத்தியம் உள்ளது.
இந்த இரண்டு நூல்களும் விரைவில் ஜேர்மன் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிவரவிருப்பதனை நினைத்து நான் பெரிதும் மகிழ்ந்து வரவேற்கிறேன்”
என்றார்.
விழாவினைத் திரு.சுயேந்திரன் தொகுத்து வழங்க
திரு.கனகரவி,திரு.வைகுந்தன் செல்வராசா, திரு.சண் தவராசா, திரு.செ.விஜயசுந்தரம் உட்பட பல தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என்று நூலாசிரியர்களை வாழ்த்தி நூலினைப் பெற்றுக்கொண்டார்கள்.