சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சராக இப்போது உதயநிதி உள்ளார். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கோப்பை இலச்சினை, சின்னம் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினையையும் இணையதளத்தையும் தோனி வெளியிட்டார்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரையும் போலவே நானும் தோனி ரசிகன்தான். சமீபத்தில் கூட போட்டியைப் பார்க்க சேப்பாக்கம் மைதானத்திற்குச் சென்றிருந்தேன். தோனியின் பேட்டிங்கை பார்க்கவே சேப்பாக்கம் மைதானம் சென்றிருந்தேன்.
சென்னையின் செல்லப்பிள்ளை தோனி பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தோனி அவரது கடுமையான உழைப்பினால் தேசிய ஐகானாக மாறியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிகளை உருவாக்க விரும்புகிறோம். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் தெரிவித்தார். மேலும், தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.