சென்னை எழும்பூரில்.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக.. பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்,

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணி மாறுதல் செய்யப்பட்டார்கள்.

இதன் காரணமாகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களுக்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அவர்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகி அவதிப்படுவதாகக் கூறுகின்றனர்.

இதற்கிடையே இவர்களைத் தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பட்டியலணி துணைத் தலைவர் கே வி எம் எஸ் சரவணகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி அவர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருக்கும் பதவி உயர்வு மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரண்ட பேராசிரியர்களும் ஊழியர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழக அரசு மற்றும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.