கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023… இன்னும் சில மணி நேரங்களில் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் (மே 10) வாக்குப்பதிவு நடக்கிறது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடைசி நேர பிரச்சாரத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. உத்தர கன்னடாவில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ’பாரத் மாதா கி ஜே’ என்றும், ’பஜ்ரங் பலி கி ஜெய்’ என்றும் கூறி பேச்சை தொடங்கினார்.
பிரதமர் மோடி பிரச்சாரம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தல் அமைப்பை தடை செய்யும் என்ற வாக்குறுதியை கடுமையாக விமர்சனம் செய்தார். உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் போது தவறாமல் ’ஜெய் பஜ்ரங் பலி’ என்று கோஷம் எழுப்ப மட்டும் மறந்து விடாதீர்கள் என்றார். இதேபோல் அடுத்தடுத்த பிரச்சாரக் கூட்டங்களிலும் ’ஜெய் பஜ்ரங் பலி’ என்று கோஷங்கள் எழுப்பினார். இது மத ரீதியிலான பிரச்சாரம் என எதிர்க்கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி பேசிய விஷயத்தை தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கையிலெடுத்துள்ளார்.
சரத் பவார் அதிர்ச்சி
இதுதொடர்பாக பந்தர்பூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக பொறுப்பேற்கும் போது ஜனநாயக மாண்புகளை மதிப்போம். மதச்சார்பின்மையை பேணிக் காப்போம் என்று தான் உறுதிமொழி எடுத்து கொள்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதம் சார்ந்த ஸ்லோகங்களை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மதவாத சக்தி
இவ்வாறு மதத்தையோ அல்லது மதம் தொடர்பான விஷயத்தையோ கையிலெடுத்தால் வேறு மாதிரியான சூழலை உண்டாக்கி விடும். இது நல்லது அல்ல என்று சரத் பவார் தெரிவித்தார். அதாவது பஜ்ரங் தல் அமைப்பை சுற்றியே இறுதிக்கட்ட பிரச்சாரம் நகர்ந்து வருகிறது. இந்த அமைப்பு விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அணி பிரிவாகும். தீவிர வலதுசாரி முகம் கொண்டது.
வலதுசாரி இயக்கம்
1984 முதல் தற்போது வரை இந்துத்துவா கொள்கைகளை உயர்த்தி பிடித்து செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியதாக சொல்லப்படும் நிலையில் சில ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கி குண்டு வெடிப்பு, கலவரம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.
தடை செய்ய காங்கிரஸ் ஆர்வம்
இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் தான் 2023 கர்நாடகா சட்டமன்ற தேர்தலை ஒட்டி பஜ்ரங் தல் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதை கண்டித்து பாஜக பிரச்சாரம் செய்வது குறிப்பிடத்தக்கது.