தமிழ்நாடு அமைதிக்கு பாதிப்பா? காஷ்யப் தலையில் குட்டு… ஆர்.என்.ரவிக்கு சரியான பதிலடி- உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்றும், அங்கு பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபடுவதை ஏற்கவே முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்திருந்த ஆர்.என்.ரவி, கோவை குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடி விஏஓ கொலை, போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல் போன்ற சம்பவங்களால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதை எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து பேசியிருந்தார். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஸ்டாலினின் பேச்சிற்கு வலு சேர்க்கும் வகையிலும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இருக்கிறது. முன்னதாக பிகாரிகள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதாக போலி வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தன. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியது தெரியவந்தது. இவர்களை கண்டறிந்து வழக்குகள் பாய்ந்தன.

யூ-டியூபர் மணிஷ் காஷ்யப்

அந்த வகையில் யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாட்டில் 6, பிகாரில் 12 என அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக தேசப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மணிஷ் காஷ்யப் மனு தாக்கல் செய்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு சட்டம் தேவையா?

இதுதொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய தேவை என்னவென்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மணிஷ் காஷ்யப்பிற்கு சமூக வலைதளங்களில் 6 லட்சம் பாலோவர்கள் இருக்கின்றனர். அவர் ஒரு தகவலை பதிவிட்டால் அது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் சமூகமே அலறவிட்டது என்று சுட்டிக் காட்டினார்.

தமிழ்நாடு அமைதியான மாநிலம்

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அங்கு பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் போலியான வீடியோக்கள் பரப்புவதை ஏற்க முடியாது. இதை பார்த்து கொண்டு எங்களால் எப்படி சும்மா இருக்க முடியும். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பது புரிகிறதா? போலி வீடியோக்களை பரப்பி விட்டுள்ளீர்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

உயர் நீதிமன்றம் செல்லலாம்

எனவே தேசப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது. வேண்டுமெனில் உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.