சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி வேலைக்கு செல்வதாக, வீட்டை விட்டு கிளம்பிய சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
வழக்குப் பதிவு செய்த மணப்பாறை போலீசார், சிறுமியின் மொபைல் போன் தொடர்புகளை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. உடனே பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் சிறுமியை மீட்டு, அவரை கடத்தி சென்ற 3 இளைஞர்களை கைது செய்தனர்.
வேலூரை சேர்ந்த முபாரக் அலி (32) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். முபாரக் அலி பெங்களூருவில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
அதனை சிறுமியும் நம்பியுள்ளார். கடந்த, 1ஆம் தேதி மணப்பாறைக்கு வந்து முபாரக் அலி, திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை பெங்களூரு அழைத்து சென்று விடுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்து முபாரக் அலி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
பின்னர் தனது நண்பர்களான வேலூரைச் சேர்ந்த ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரை விடுதி அறைக்கு அழைத்துள்ளார். ரியாஸ், சதாம் உசேன் ஆகியோரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விடுதி அறையில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை மீட்டு திருச்சி அழைத்து வந்த போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முபாரக் அலி, ரியாஸ், சதாம் உசேன் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
newstm.in