கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்வள துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுமான பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் ஆய்வுப் பணியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு பணி நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்வேறு பணிகள் 2011 ஆம் ஆண்டு வரை துரிதமாக நடைபெற்று வருந்து வந்தது. பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் பல திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளனர். அந்த பணிகளை திமுக அரசு தற்போது மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ளது என பேசினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் தென்காசி பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து திரைப்பட சூட்டிங் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் மீண்டும் திரைப்படம் சூட்டிங் நடைபெற்று வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் “நீர்நிலைகளில் சினிமா சூட்டிங் எடுக்க அனுமதி தரக்கூடாது. யார் அனுமதி கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்து அதில் தவறு இருக்குமானால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என செய்தியாளர்களின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.