நீலகிரியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு – நடந்தது என்ன?

நீலகிரியில் 34 மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்ததற்கு காரணம் என்ன?

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி பொதுத் தேர்வு ஆரம்பமானது. இந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி நிறைவடைந்தது. அதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 7,440 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 

அதேபோல், இந்த தேர்வை கண்காணிப்பதற்காக துறை அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், பறக்கும் படை என்று மொத்தம் 761 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற கணித தேர்வில் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களுக்கு விடை எழுத உதவியதாக புகார் வந்தது. 

அந்த புகாரின் படி அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பாற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கல்வித்துறை, கண்காணிப்பாளர் உட்பட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்தது. 

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுதும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், நீலகிரி மாவட்டத்தில் 93.85% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால், சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவி செய்ததாக கூறப்பட்ட 34 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேர்வு விடைத்தாள்கள் சென்னை கல்வி தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்..
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.