நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இளைஞர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, கிராம நிர்வாக அலுவலரை அழைத்துக் கொண்டு போலீஸார் அந்த கிராமத்துக்குச் சென்று குறிப்பிட்ட அந்த நபரின் வீட்டில் திடீர் சோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது, அந்த நபர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதை உறுதிசெய்தனர். அதைத் தொடர்ந்து, கஞ்சா செடிகளை அழித்த போலீஸார், அந்த நபரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதில் வீட்டில் தடைசெய்யப்பட்ட வெடிபொருள்களை அந்த நபர் வைத்திருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, அவரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “கோத்தகிரி, கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த 50 வயதான மோகன் என்பவர் யாருக்கும் தெரியாமல் வீட்டில் 3 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தார். எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவரைக் கையும் களவுமாகப் பிடித்தோம். அந்த நபர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மேலும், தடைசெய்யப்பட்ட 5 வெடிமருந்து பாக்கெட்டுகள், 2 ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருந்ததையும் கண்டுபிடித்தோம். கிணறு தோண்ட வெடிபொருள்களை வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் கூறியிருக்கிறார். கஞ்சா, வெடிபொருள்களைப் பறிமுதல் செய்தோம். மோகனைக் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் ” என்றனர்.