புதுடில்லி, அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது, இதற்காக சட்டத் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துஉள்ளது.
அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி செயல்பாடுகள் பணிக் குழு என்ற சர்வதேச அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. கடந்த, 2019ல் இந்த அமைப்பின் ஆய்வு நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது நடந்து வரும் அந்த ஆய்வு, வரும் நவம்பருக்குள் முடிவடையும். அதனால், பண மோசடி தொடர்பாக விசாரிக்கும் அமலாக்கத் துறையின் தலைவரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக் காலம் நீட்டிக்கப்பட்டது. வரும் நவம்பருக்குப் பின், அவர் இந்தப் பதவியில் தொடர மாட்டார்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement