என்.எல்.சி நிறுவன நில எடுப்புக்கு ஆதரவாக கையெழுத்து கேட்டதாக திமுக கவுன்சிலர் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம மக்கள் தங்களுக்கு பணிக்கான உத்திரவாதம் மற்றும் வயல்களில் உள்ள வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், வளையமாதேவியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கரிவெட்டி கிராமத்தில் வீடு, வீடாக சென்று, என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுக்க தயார் என அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்து கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், திமுக கவுன்சிலர் செல்வத்தை சிறைப்பிடித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை திமுக கவுன்சிலர் செய்வது ஏன் என்று கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in