திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் வைக்கப்பட்ட விசாரணை குழுவானது கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை நடத்தியது. விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 17 வயது சிறுவனின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது வரை பல்வேசிங் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் அளித்த புகாரின் பெயரில் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த பல்வீர்சிங், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வீர்சிங் மீது பதியப்படும் நான்காவது வழக்கு இதுவாகும். அடுத்தடுத்து காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் பல காவல்துறை அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.