களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் கார் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சி
குறித்த மாணவி இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வந்துள்ளமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.
இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது இளம் பெண் ஒருவரும், மற்றைய இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதுடன், 20 நிமிடங்களுக்கு பின் மற்றைய இளைஞனும் பதற்றத்துடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற இளைஞன்
இந்த நிலையில் புகையிரத தண்டவாள பகுதியில் பெண்ணொருவர் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாணவியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் விடுதிக்கு சென்ற ஆணொருவரும், பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர் இரு திருமணம் முடித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.