ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.76-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 94.03 சதவிகிதமாக அது அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், “தமிழக வரலாற்றில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிப்பதை தாமதப்படுத்திய ஒரே அரசு, இந்த தி.மு.க அரசுதான்” என தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சாடியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்கள்படும் துயரங்கள் குறித்து நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருகைக்காக 8.51 லட்சம் மாணவர்கள் காத்திருந்த அவலம் இன்று நடந்திருக்கிறது. ஆட்சியமைத்து இரண்டாண்டுகள் முடிந்த தருவாயில், தமிழக வரலாற்றில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதப்படுத்திய ஒரே அரசு இந்த தி.மு.க அரசுதான் என்ற கோப்பையை, தட்டிச் சென்றிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முழு நேர உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராகவும், பகுதி நேர தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்துக்கு வர தாமதமானதால் ப்ளஸ் டூ தேர்வெழுதிய 8.51 மாணவர்கள், இன்று காலை 9:30 மணியிலிருந்து தமிழகம் முழுக்க காக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
அமைச்சர் திருச்சியிலிருந்து விமானத்தில் வர தாமதமானதாகக் கூறுகிறார்கள். 8.51 லட்சம் மாணவர்கள் சரியாக காலை 9:30 மணிக்கு கனவுகளுடன் காத்திருப்பார்கள் என்ற அக்கறை இருந்திருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்தில் அமைச்சர் வந்திருப்பார். அந்த பொறுப்புணர்வும், கடமையும் கிஞ்சித்தும் இல்லாததால் அமைச்சர் தாமதமாக வந்திருக்கிறார். இது இந்த தி.மு.க ஆட்சியின் கையாலாகாததனத்தையும், நிர்வாகத் திறமையின்மையையுமே மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தயவு செய்து உங்கள் அற்ப அரசியலுக்காக மாணவர்களின் கனவுகளுடன் விளையாட வேண்டாம் முதல்வரே. தமிழகத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள் சினம் கொண்டால் அதை தாங்கும் திராணி உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ கிடையாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்வு முடிவுகள் தாமதமானது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, “நான் வந்து சேர்வதில் சற்று தாமதமாகிவிட்டது. மாணவர்கள் எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக இருப்பர் என்பது எனக்கும் தெரியும். தாமதத்துக்காக வருந்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.