கொல்கத்தா,
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் ஆனார்.
பின்னர் களமிறங்கிய இயம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 21 ரன்களும், மறுமுனையில் சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் கரன் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார்.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 8 பந்துகளில் 21 ரன்களுடனும், ஹர்பிரீத் 9 பந்தில் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த ஜேசன் ராய் 38 (24) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிதிஷ் ராணா 37 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தநிலையில் 51 (38) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஆண்ட்ரூ ரசலுடன், ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. கடைசி ஒவரில் 7 ரன்கள் தேவைபட்டநிலையில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முடிவில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் ரசல் 42 (23) ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 21 (10) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ் மற்றும் ஹர்பீரித் பிரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.