இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திலிருந்து இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப் பட்டுள்ளனர். வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு பகுதி அளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் ராணுவமும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவும் கடந்த 96 மணி நேரமாக தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இதன் பலனாக படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை.
இதையடுத்து வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூரில் காலை 7 மணி முதல் 10 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.அதன் பிறகு பாதுகாப்புப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 23 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதே சமுதாய மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி) சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியினமக்கள் மேதே சமுதாயத்தினர் மீது கடந்த 3-ம் தேதி தாக்குதல் நடத்தினர். கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையிலான மோதல் கலவரமாக மாறியது.
மாநில போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் வரவழைக்கப்பட்டனர். வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயல்புநிலை திரும்புகிறது
மாநில டிஜிபி டி.டூஞ்சல் கூறும்போது, “பாதுகாப்புப் படையினரின் தலையீடு காரணமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. சிஆர்பிஎப் தலைவர் குல்தீப் சிங் பாதுகாப்புஆலோசகராக நியமிக்கப்பட்டுள் ளார். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த பணிக்கான செயல்கமாண்டராக காவல் துறை கூடுதல் இயக்குநர் (புலனாய்வு) அசுதோஷ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.