பீஜிங்,-சீனாவில் நிலவும் ஏழ்மை, வறுமை குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், ‘வீடியோ’க்களை அந்நாட்டு அரசு அகற்றிவிடுவதாக, ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
சீனாவில் பணி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், தன் சமூக வலைதளத்தில், சமீபத்தில் ‘வீடியோ’ ஒன்றை பதிவிட்டார்.
இதில், ஓய்வூதியமாக தனக்கு கிடைக்கும் 100 சீன யுவானில் என்னென்ன மளிகை பொருட்கள் வாங்க முடியும் என்றும், அதில் உள்ள சிரமம் குறித்தும் பேசியிருந்தார்.
இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சீன அரசு இதை உடனடியாக அகற்றியது. இதே போல, இளைஞர்கள் மத்தியில் நிலவும் வறுமை குறித்து, கல்லுாரி மாணவர் ஒருவர் பாடல் பாடி, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்த பாட்டுக்கு. சீன அரசு தடை விதித்ததுடன், அவரது சமூக வலைதள கணக்கையும் முடக்கியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமான வீடியோக்கள், பதிவுகளை யாரும் வெளியிடக் கூடாது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் குறித்து சோகத்தை துாண்டும் விதமான வீடியோக்களையும் பதிவிடக் கூடாது.
மீறி பதிவிட்டால் அவை கண்காணிக்கப்பட்டு அகற்றப்படும் என, சீன அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துஉள்ளது.
தற்போது வறுமை மற்றும் ஏழ்மை தொடர்பாக வெளியாகும் இணைய தள பதிவுகளையும், அந்நாட்டு அரசு அகற்றி வருவதாக, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement