2 தொகுதிகளில் போட்டியிடுவது குதூகலமாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது மந்திரி சோமண்ணா பேட்டி

மைசூரு-

2 தொகுதிகளில் போட்டியிடுவது குதூகலமாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது என்று மந்திரி சோமண்ணா கூறினார்.

சட்டசபை தேர்தல்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்து வருபவர் சோமண்ணா. நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் இவர் பா.ஜனதா சார்பில் வருணா தொகுதியிலும், சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதில் அவர் வருணா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை எதிர்த்து களம் காண்கிறார்.

நேற்று அவர் வருணா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 தொகுதிகளில் போட்டி

நான் இந்த தேர்தலில் வருணா மற்றும் சாம்ராஜ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேன். இது ஒருவகையில் எனக்கு குதூகலமாக உள்ளது. ஆனால் மற்றொரு வகையில் இது எனக்கு ஆதங்கமாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் நான் சந்திக்கும் 11-வது தேர்தல். இந்த தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் பா.ஜனதா மேலிடம் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 2 தொகுதிகளில் போட்டியிடுமாறு கூறினார்கள். அவர்களின் கட்டளையை நான் ஏற்றுக் கொண்டேன்.

பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா ஆகியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து 2 தொகுதிகளிலும் களம் காண்கிறேன். அதிலும் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஒப்புக் கொண்டேன்.

ஆண்டவனின் கட்டளை

சித்தராமையாவை பற்றி நான் கேலியாகவும், கிண்டலாகவும் பேச மாட்டேன். நான் அவருடனே இருந்து பழகி மந்திரியானவன். அவருடன் அரசியலில் இருப்பவன். நாங்கள் எல்லாம் நண்பர்கள். ஆனால் தேர்தல் போட்டி விஷயம் வேறு. சித்தராமையாவுக்கு எதிராக நான் போட்டியிட வந்தது ஆண்டவனின் கட்டளை.

நான் தேர்தலில் எனக்கு பதிலாக என்னுடைய மகனுக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். அரசியல் என்பது ஒரே பக்கம் இருக்கும் நீர் அல்ல. அது ஓடிக்கொண்டே இருக்கும் நீர். அரசியலில் யாரும் நிரந்தர எதிரிகளும் அல்ல, நண்பர்களும் அல்ல. நான் 2 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று ஒரு சவாலுடன் போராடி வருகிறேன். வெற்றிபெற்று காட்டுவேன். வருணா தொகுதியை தன் கையில் வைத்திருக்கும் சித்தராமையா அந்த தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகளை ஏன் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.