குவாஹாத்தி: 4 வயது பெண் குழந்தையை அவர்களது பெற்றோர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியை சேர்ந்தவர் சங்கீதா தத்தா. இவர் ஒரு மனநல மருத்துவர். இவருடைய கணவர் வளியுள் இஸ்லாம். இவர் ஒரு குடல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.
குழந்தையே இல்லாத அந்த தம்பதி அந்த குழந்தையை தத்தெடுத்து தாலாட்டி, சீராட்டி வளர்ப்பார்கள் என எதிர்பார்த்தால் அவர்களோ 4 வயதாகும் அந்த குழந்தையை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இது குறித்து அக்கம்பக்கத்து வீட்டார் வீடியோவாக வெளியிட்டு இந்த கொடூர சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர்.
மணிபுரி பஸ்டி நகரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவ தம்பதி அந்த சிறிய குழந்தையை மொட்டை மாடியில் ஒரு கம்பியில் கட்டி போட்டு கொளுத்தும் வெயிலில் கொடுமைப்படுத்தியுள்ளனர் அது போல் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுவைத்தும் சித்ரவதை செய்ததாக தெரிதிறது. அது போல் அந்த குழந்தை சுட்டித்தனம் செய்தால் கட்டி போடுமாறு வீட்டு பணிப்பெண்ணுக்கும் இவர்கள் உத்தரவிட்டிருந்தனராம்.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அவர்கள் அங்கு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் குழந்தையை மீட்டு தம்பதியை தேடி வந்தனர். இந்த நிலையில் மேகாலயாவில் மறைந்திருந்த மருத்துவ தம்பதியை போலீஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் அந்த குழந்தையை டார்ச்சர் செய்யவில்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்திருந்தோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது அது தோல்வியில் முடிந்தது. அதன் பிறகுதான் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என முடிவு செய்தோம். அப்படித்தான் இந்த குழந்தையை தத்தெடுத்தோம்.
ஆனால் நாங்கள் இருவரும் வசதியானவர்கள், மருத்துவர்கள், எங்கள் தொழிலை கெடுக்க சிலர் எங்கள் மீது இப்படியொரு பழியை போடுகிறார்கள் என தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறை கூறுகையில் அந்த குழந்தை தங்கள் குழந்தை என்றனர். பின்னர்தான் அந்த குழந்தையை தத்தெடுத்திருந்ததை ஒப்புக் கொண்டனர். டாக்டர் இஸ்லாம் அந்த குழந்தையை சூடான இரும்பு கம்பியால் அடித்ததாகவும் சின்னஞ்சிறிய குழந்தை மீது வெந்நீரை ஊற்றுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இஸ்லாம் தனது தவறுகளை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டாரின் புகாரின் பேரில் அந்த மருத்துவ தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.