ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப் பயன்படுத்திய பெருமை `ஆளவந்தான்’ படத்திற்கு உண்டு. “கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்” என கமல் கர்ஜிக்கும் `ஆளவந்தான்’ படம், 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் வெளியாகவிருக்கிறது. நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்பட்ட வெர்ஷனாக வரவிருக்கிறது என்கிறார்கள். `ஆளவந்தான்’ ரி-ரிலீஸ் குறித்து விசாரித்தேன்.
சமீபகாலமாக ‘நல்லவனும் நானே… கெட்டவனும் நானே…’, ‘நானே ஹீரோ, நானே வில்லன்’ டைப்பில் படங்கள் வருகின்றன. ஆனால் 22 வருடங்களுக்கு முன்னரே அப்படி வெளியான படம்தான் ‘ஆளவந்தான்’.
குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையைக் கொண்டது இது. இரண்டு கமலில் ஒருவர் கமாண்டோ, மற்றொருவர் கொடூர வில்லன். கமல் தவிர ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, மிலிந்த் குணாஜி, சரத்பாபு, அனுஹாசன் என ஏகப்பட்ட பேர் நடித்திருப்பார்கள்.
தாணுவின் பிரமாண்டத் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், திரு ஒளிப்பதிவு செய்திருப்பார். படத்தின் பாடல்களை ஷங்கர் – ஈஷான் – லாய் கூட்டணியும், பின்னணி இசையை மகேஷ் மாதவனும் செய்திருப்பார்கள்.
ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவைப் பயன்படுத்தியது இதில்தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என்று ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் கமல். தவிர, க்ளைமாக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைபோடுவதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், அன்றைய காலத்திலேயே எடுத்து மிரட்டியிருப்பார்கள். இந்தப் படத்தின் ரி-ரிலீஸ் உண்மைதானா என்பது குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் விசாரித்தேன்.
“மீண்டும் ரிலீஸ் பண்ணப் போறது உண்மைதான். அப்பவே லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அந்தப் படம் வெளியானது. இப்போது இன்னும் நவீன தரத்தில், புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. முதலில் படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ், அதனைத் தொடர்ந்து டீசர், டிரெய்லர் எனப் புதுப்படத்தின் புரொமோஷன் போல, ஒவ்வொன்றாக வெளிவரவிருக்கிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டோம்” என்கிறார் தாணு.