GTvLSG: `குஜராத்தை வென்றதே இல்லை!' தொடரும் லக்னோவின் வேதனை! – ஓர் அலசல்

புத்தாயிரத்தின் தொடக்கத்திலான ஆஸ்திரேலியா, 2020 சீசனின் மும்பை இந்தியன்ஸ் போன்ற சாம்பியன் அணிகளுக்கே உரிய மூலப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டது குஜராத்.

லக்னோவுடனான மோதலில் அவர்களை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக பிளே ஆஃப் பெர்த்துக்கான வாய்ப்பினை மிகப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளதோடு, பௌலிங் பலம் மட்டுமல்ல பேட்டிங்கும் சற்றும் சளைத்ததல்ல என மீண்டுமொரு முறை நிருபித்துள்ளது குஜராத். இதன் மூலம் கோப்பையை வெல்வதற்கான தகுதியுள்ளதை ஒவ்வொரு போட்டியிலும் நிருபித்து வருகிறது.

குஜராத் vs லக்னோ

தோனி – ரெய்னாவின் Bromance-ல் மூழ்கித் திளைத்து மீளுவதற்கு உள்ளாகவே இன்னுமொரு சகோதரத்துவத்தால் நெய்யப்பட்ட நெகிழ்ச்சியான தருணத்தை பாண்டியா பிரதர்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இப்போட்டி அமைத்துத் தந்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடத்தொடங்கிய சமயத்தில் தனித்தனியாக இரு பேட்டுகள்கூட இல்லாமல் ஒன்றை வைத்தே இருவரும் அடுத்தடுத்து ஆடிய சந்தர்ப்பங்களும் உண்டு, அதுவும் உடைந்த நிலையில் என்ன செய்வதென தெரியாமல் தத்தளித்த நிலையையும் சந்தித்தவர்கள் தான்.

அங்கிருந்து பத்து ஆண்டுகளில் இருவேறு ஐபிஎல் அணிகளுக்கு தலைமையேற்று மோதிக் கொள்ளும் அளவிலான இந்த அபரித வளர்ச்சி அவர்களோடு ரசிகர்களையும் நெகிழ வைத்திருந்தது. டாஸை வென்ற க்ருணால் இதற்கு முன்னதாக இதே பிட்சில் குஜராத் வைத்த 205 இலக்கை கேகேஆர் எட்டியதை நினைவில் கொண்டு ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

சிஎஸ்கேவைப் போலவே அணியை அடிக்கடி குலைப்பதில் நம்பிக்கை இல்லாத குஜராத் தேசிய அணிக்காக ஆடச் சென்றிருந்த லிட்டிலுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசஃப்பினை மட்டும் மாற்றுவீரர் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆனால் லக்னோவோ ராகுலின் இடத்தை நிரப்ப ஹோல்சேல் வியாபாரமாக பல மாற்றங்களைச் செய்திருந்தது. பல போட்டிகளாகக் காத்திருந்த டீ காக் சேர்க்கப்பட்டிருக்க அவருக்காக தனது ஓவர்சீஸ் ஸ்லாட்டை நவீன் விட்டுத் தந்திருந்தார். மார்க் உட்டும் இல்லாத நிலையில் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்த நவீனையும் வெளியே அமர வைத்தது வேகப்பந்து வீச்சை மேலும் பற்கள் அற்றதாக்கியது. இது லக்னோ தனக்குத் தானே சூடு போட்டுக் கொண்டது போலாக அதன் பக்க விளைவுகளே போட்டி முழுவதும் எதிரொலித்தது.

குஜராத் vs லக்னோ

அற்புதமான கீப்பிங் திறனால் குஜராத் அணியில் தவிர்க்க முடியாத தேர்வாகி இருப்பினும் சாஹா ஒரு பேட்ஸ்மேனாக குறிப்பாக ஓப்பனராக இத்தொடரில் சற்றே ஏமாற்றத்தையே தந்து வந்தார். இந்தப் போட்டியோ சாஹாவின் மொத்த பேட்டிங் திறனையும் வெளிப்படுத்தும் கண்காட்சியாக மாறியது. பவர்பிளேவுக்கு உள்ளாகவே வெறும் 20 பந்துகளில் அரைசதத்தை சாஹா அடித்திருந்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடக்கம். வேகம், வேடம் தரித்து ஏமாற்றும் வேரியேஷன்கள், ஸ்பின் என எல்லாவற்றுக்குமான பதிலை அவரது பேட் தந்து கொண்டே இருந்தது. Outdated என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ரஹானே, இஷாந்த், ப்யூஸ் சாவ்லா என பல வீரர்களும் தங்களது அப்டேட்டட் வெர்ஷனை இந்த சீசனில் வெளிப்படுத்திக் கொண்டிருக்க சாஹாவும் அவர்களோடு இணைந்துள்ளார்.

லக்னோவின் பக்கமும் தவறுகள் இல்லாமல் இல்லை. காயத்திலிருந்து ஓராண்டுக்குப் பின் திரும்பியிருக்கும் மோசின் கானினை அவசரகதியில் களமிறக்கியிருந்தனர்.

அவரோ தனக்குரிய ரிதம் செட் ஆகாமல் பந்துகள் அடித்து நொறுக்கப்படுவதை மட்டுமே பரிதாபகரமாக பார்க்க வேண்டியிருந்தது. வழக்கமான அவரது வேகம்கூட சற்றே மட்டுப்பட்டிருந்தது. மேயர்ஸ் புதுப் பந்தினை ஸ்விங் செய்ய வைத்து விக்கெட் எடுக்கக்கூடியவர், கட்டர்களோ ஸ்லோ பால்களோ அவரது பலமல்ல. அதனாலேயே ராகுல் அவரை ஓப்பனிங் ஓவரை வீச வைப்பார். ஆனால் க்ருணால் அவரை எட்டாவது ஓவரில் வீசவைக்க அவரது பந்துகளும் சேதாரத்தையே சந்தித்தன.

குஜராத் vs லக்னோ

விக்கெட் டேக்கிங் பௌலர்களால் நிரம்பியிருப்பது குஜராத்தின் பலமெனில் லக்னோவின் பலவீனமோ பவர்பிளேவில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறுவது தான். அதிக பவர்பிளே விக்கெட்டுகளை எடுத்த அணிகளுக்கான பட்டியலில் 9 விக்கெட்டுகளோடு லக்னோதான் இறுதி இடத்தில் இருக்கிறது. இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. 8.14 என்னும் அவர்களது ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்டின் எக்கானமியின் சராசரிதான் அவர்களை ஓரளவேனும் இதுவரை கரை சேர்த்து வந்தது. இப்போட்டியில் அதையும் வேட்டு வைத்துத் தகர்த்தது குஜராத். 10 ஓவர்களிலேயே 121 ரன்களை எட்டி விட்டனர். ஒரே ஓவரோடு நிறுத்தப்பட்ட அவிஸ் கானை திரும்பக் கொண்டு வந்து அசைக்க முடியாத சாஹாவினை லக்னோ ஆட்டமிழக்க வைத்து ஆறதல்பட்டுக் கொண்டது. ஆயினும் குஜராத்தின் ஆட்டத்தின் காட்டம் தணியவில்லை.

பவர்பிளே வரை அடக்கி வாசித்திருந்த கில் இன்னொரு முனையில் 29 பந்துகளில் அரை சதத்தை எட்டியதோடு ஏற்கனவே டாப் கியரில் பயணிக்கத் தொடங்கியிருந்தார். யாஷ் தாக்கூரின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தில் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக்கில் அடிக்கப்பட்ட சிக்ஸராகட்டும், ரவி பிஷ்னாயினை இறங்கி வந்து அட்டாக் செய்த விதமாகட்டும், ஸ்டோய்னிஸின் ஆஃப் கட்டரை லாங் ஆனில் அனுப்பிய பாங்காகட்டும் அத்தனை நேர்த்தியானதாக ஒவ்வொன்றுமே அமைந்திருந்தது.

சாஹாவிற்குப் பிறகு வந்த பாண்டியாவும் சரி மில்லரும் சரி ரன்ரேட்டினை அப்படியே எடுத்துச் செல்வதில் கவனமாக இருந்தனர். 51 பந்துகளில் 94 ரன்களை எடுத்திருந்த கில் இறுதி வரை ஆட்டமிழக்காமலே இருந்தது போட்டியின் எந்த இடத்திலும் விக்கெட் இழப்பால் ஒரு தேக்க நிலை உருவாகாமல் பார்த்துக் கொண்டது. லக்னோவுடனான இதற்கு முந்தைய மூன்று மோதல்களில் இருமுறை கில் டக் அவுட் ஆகியிருந்தார், இன்னொன்றில் 63 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்த இன்னிங்க்ஸோ இன்னமும் தரமுயர்த்தப்பட்டதாக வடிவெடுத்திருந்தது. அதனாலேயே 228 என்னும் கடின இலக்கினை குஜராத்தும் நிர்ணயித்திருந்தது.

குஜராத் vs லக்னோ

கடின இலக்கு, புதிய ஓப்பனிங் கூட்டணி என எல்லாமே லக்னோவின் சேஸிங்கிற்கு சவால் விடும் விஷயங்களே. நிலைநிறுத்திக் கொள்வதற்கெல்லாம் நேரமில்லை. பவர்பிளேயில் இருந்தே இருபுறமும் பற்ற வைக்கப்பட்ட பட்டாசாக வெடித்துச் சிதறினால் மட்டுமே இலக்கை எட்டுவதைப் பற்றி கற்பனையாவது செய்து பார்க்க முடியும். எனவேதான் மேயர்ஸ் – டீ காக் கூட்டணி அதிரடியாகத் தொடங்கியது. ஷமி வீசிய முதல் ஓவரில் நான்கு ரன்களோடு மெதுவாகத் தொடங்கினார்கள். ஆனால் ஹர்திக் வீசிய அடுத்த ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரியோடு அடித்து நொறுக்க உள்ளதற்கான டிரைலரைக் காட்டினார் மேயர்ஸ். 10 என்ற ரன்ரேட்டை மையமாய் வைத்தே இருவரது பேட்டுகளும் வலம் வரத் தொடங்கின. பவர்பிளேயிலேயே 72 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்த நிமிடத்தில் ஏறக்குறைய வெற்றியை நோக்கியதாகவே அவர்களது ரன்ரேட் கிராஃப் அம்புக்குறி இட்டது.

முந்தைய மோதலில் 136 ரன்களையே எட்ட முடியாமல் செய்து கடைசி ஐந்து ஓவர்களில் லக்னோவினை சுருட்டியவர்கள் இந்தப் போட்டியிலா விட்டு விடுவார்கள்? வேகப்பந்து வீச்சை நிறுத்தி பவர்பிளேவின் இறுதி ஓவர்களை ரஷித் மற்றும் நூர் அஹ்மத்தை வீச வைத்தார் ஹர்திக்.

சற்றே பின்வாங்கி பின் டீ காக் நூர் அஹ்மத்தின் ஓவரையும் பழுது பார்த்தார். சற்றும் யோசிக்காமல் மோஹித்தை இறக்க அவர் வீசிய ஷார்ட் பால் சற்றே குறைவான வேகத்தில் வந்து மேயர்ஸின் விக்கெட்டைக் காவு வாங்கியது. இங்கேதான் சரிய ஆரம்பித்தது லக்னோ. ஒன்டவுனில் இறங்கிய ஹூடாவினால் உடனே செட்டில் ஆக முடியாமல் போக, டீ காக்கின் வேகமும் சற்றே மட்டுப்பட, அடுத்த 3 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே லக்னோவால் சேர்க்க முடிந்தது. உடனே சமயோசிதமாக ஷமியினைக் கொண்டு வந்து அட்டாக்கினை ஆரம்பித்தார் ஹர்திக். ஃபுல் டாஸ் பாலினை மிட் விக்கெட்டில் செலுத்த முயன்று ஹூடா ஆட்டமிழந்தார்.

குஜராத் vs லக்னோ

9 – 15 ஓவர்களில் மொத்தமே இரு சிக்ஸர்கள் மட்டுமே பெரிய ஷாட்டுகளாக வந்து சேர்ந்திருந்தன. முன்னதாக லக்னோ பௌலர்கள் தொடக்கத்திலேயே தாக்குதலைத் தொடங்கவில்லை. இறுதிக் கட்டத்திலும் ஸ்லோ பால்களால் வலை விரித்தாலும் அதுவும் சரியான லெந்தில் வரவில்லை. ஆகவே எவ்வித தாக்கத்தையும் அவர்களால் நிகழ்த்த முடியவில்லை. ஆனால் குஜராத் பௌலர்கள் பவர்பிளேவில் கோட்டை விட்டதனை மிடில் ஓவர்களில் இறுக்கிப் பிடித்தனர். 15-வது ஓவரின் முடிவில் தேவைப்படும் ரன்ரேட் 20-ஐ எட்டிய போதே கிட்டத்தட்ட லக்னோவின் தோல்வி உறுதியாகி விட்டது. கடைசி ஐந்து ஓவர்களை நெட் ரன்ரேட் சரிந்து விடக்கூடாது என்ற நோக்கில் மட்டுமே லக்னோ அணுகியது. 41 ரன்களை மட்டுமே அக்கட்டத்தில் விட்டுத்தந்து நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குஜராத்.

எட்ட முடியாத இலக்கே எனினும் சேஸிங்கில் பத்தாவது ஓவர் வரை போட்டி லக்னோவின் கைப்பிடியிலும் இருக்கவே செய்தது. மேயர்ஸ் – டீ காக் கூட்டணி உடைந்ததும், ஹர்திக் பாண்டியாவின் பௌலிங் மாற்றங்களும் வெற்றியை குஜராத்தின் பெயருக்கு பட்டையம் பதிந்தன. சுப்மன் கில், சாஹா மட்டுமல்ல நான்கு விக்கெட்டுகளை பௌலிங்கிற்கு அதிகமாக ஒத்துழைக்காத பிட்சில் வீழ்த்திய மோஹித்தும் இன்னுமொரு முறை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். இடத்தில் மாற்றமில்லை எனினும் லக்னோவின் ரன்ரேட்டினையும் இது மோசமாக பாதித்துள்ளது.

இரு சீசன்கள் ஆகியும் குஜராத்தை வென்றதே இல்லை என்ற லக்னோவின் வேதனையும் அப்படியே தொடர்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.