சென்னை: Kamal Haasan and Manobala (கமல் ஹாசன், மனோபாலா) மனோபாலா மற்றும் கமல் ஹாசன் குறித்து சுஹாசினி பேசிய ஒரு விஷயத்தை அடுத்து இதனால்தான் மனோபாலாவின் இறுதி சடங்குக்கு கமல் ஹாசன் நேரில் வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா. அவர் இயக்கிய பிள்ளை நிலா திரைப்படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அதேபோல் ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கிய ஊர்க்காவலன் படம், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய சிறைப்பறவை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட படங்களில் ஒரு இயக்குநராக தனது ஆளுமையை நிரூபித்திருப்பார் மனோபாலா.
சிறந்த நடிகர்: இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்திவந்த மனோபாலா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனது உடல்மொழியாலும்,தன்னுடைய டயலாக் டெலிவரியாலும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். அதேபோல் தயாரிப்பாளராக சதுரங்க வேட்டை என்ற மிகச்சிறந்த படத்தை முதல் படமாக தயாரித்தார். அதனையடுத்து சதுரங்க வேட்டை 2, பாம்பு சட்டை படங்களை தயாரித்தார். இதில் சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கிறது.
உயிரிழந்த மனோபாலா: இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்ட கமல் ஹாசன்: மனோபாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மனோபாலா நேரடியாக பாரதிராஜாவிடம் சென்று சேரவில்லை. நடிகர் கமல் ஹாசன் பரிந்துரையின் அடிப்படையில் மனோபாலாவை பாரதிராஜா உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார்,. இதனால் கமலுக்கும், மனோபாலாவுக்கு நெருங்கிய நட்பு இருந்தது.
அடைக்கலம் தந்த சகோதரர்கள்: கமல் ஹாசன் பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்டாலும் அவருக்கு முதலில் பழக்கம் கிடைத்தது கமல் ஹாசனின் சகோதரர்களான சாரு ஹாசன் மற்றும் சந்திரஹாசன்தான். பழகியதோடு மட்டுமின்றி தங்களது வீட்டிலேயே அவருக்கு தங்க இடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம்தான் அவருக்கு கமல் ஹாசன் மூலம் பழக்கம் ஏற்பட்டதாம்.
பேச்சை நிறுத்திய கமல் ஹாசன்: இந்நிலையில் மனோபாலாவிடம் கமல் ஹாசன் இடையில் பேச்சை நிறுத்தியது தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக சுஹாசினி அளித்த பேட்டியில், “மனோபாலாவை திரைத்துறைக்கு கொண்டு வந்தது கமல் ஹாசன் தான். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். மனோபாலா இருக்கும் இடத்துக்கே கமல் ஹாசன் வரமாட்டார்.
அவர் மீது கோபம்: அவர் ஒருமுறை என்னிடம் வந்து உன் சித்தப்பா உலகத்திடமே பேசுகிறார் என்னிடம் பேச மறுக்கிறார் என்றார். எதாவது அவரிடம் இவர் வாயை விட்டிருப்பார். இப்போது பேசிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல், எங்கள் நிறுவனத்தின் படத்தையும் இதெல்லாம் ஒரு படமா என கேட்டார். இதனால் அவர் மீது எங்கள் நிறுவனத்தினரும் கோபித்துக்கொண்டனர். ஆனால் மனதளவில் அவர் ரொம்பவே நல்லவர்” என்றார் சுஹாசினி.
இதுதான் காரணமா?: மனோபாலா இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு சுஹாசினி இவ்வாறு பேசியிருந்தார். ஆனால், அந்த பேட்டியில், கமலும் மனோபாலாவும் இப்போது பேசிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்றுதான் கூறியிருந்தார். இருப்பினும், கமலும், மனோபாலாவும் கடைசிவரை பேசிக்கொள்ளவே இல்லையோ; அதனால்தான் மனோபாலாவின் இறுதி சடங்குக்கு கமல் ஹாசன் வரவில்லையோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.