ரஜினி கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் `லால் சலாம்’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் மொய்தீன் பாய் என்ற அப்டேட் வெளியாகியிருக்கிறது. நெருப்பு கக்கும் கலவர பூமியில் வீர நடை போட்டு வருபவராக, `சாந்தியும் சமாதனாமும் உண்டாவதாக’ என்ற கேப்ஷனுடன் `லால் சலாம்’ போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. `லால் சலாம்’ பற்றி விசாரித்ததில் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இங்கே.
‘3’, ‘வை ராஜா வை’, ‘சினிமா வீரன்’ (ஆவணப்படம்) படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் ‘லால் சலாம்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர் உட்படப் பலர் நடித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு செஞ்சியில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் கோயில் ஒன்றில் தொடங்கியது. செஞ்சியைத் தொடர்ந்து திருவண்ணாமலை, பாண்டிச்சேரி அருகே உள்ள கிராமங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. அந்த ஷெட்யூலுடன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படத்தின் ஃப்ளாஷ்பேக் போர்ஷன்கள் இதுவரை படமாக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்றும், இஸ்லாமியராக நடிக்கிறார் என்பதையும் நாம் முன்பே சொல்லியிருந்தோம்.
இப்போது ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயரையும் அறிவித்துள்ளனர். கடந்த சில நாள்களாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும், ரஜினியின் போர்ஷன், இன்றிலிருந்துதான் தொடங்குகிறது. ரஜினியின் தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடித்து வருகிறார். இம்மாத கடைசி வரை மும்பையில் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள். இதனையடுத்து ஹைதராபாத், திருவண்ணாமலையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், திருவண்ணாமலை ஷெட்டியூலோடு படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் சொல்கிறார்கள். இந்த பிப்ரவரி மாதமே மூன்று பாடல்களை கம்போஸிங் செய்து முன்னரே கொடுத்துவிட்டார் ரஹ்மான் என்றும் தகவல்.