சென்னை: Rajini And Kamal (ரஜினி மற்றும் கமல்) கமல் ஹாசனைவிட ரஜினிகாந்த்தான் புத்திசாலி என பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப் கூறியிருக்கிறார்.
கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினியும், கமல் ஹாசனும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர்.
கூட்டணி அமைத்த ரஜினி, கமல்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். கமல் ஹாசன் மீது எப்போதும் தீராத நட்பு கொண்ட ரஜினிகாந்த்தும் அதை ஆமோதித்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். கம்ர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை என நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் அவர் தனது திறமையையும் நிரூபித்தவர்.
உலக நாயகன் கமல் ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.
பத்திரிகையாளர்களிடம் ரஜினி: ரஜினிகாந்த் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே கொட்டிவிடும் பழக்கமுடையவர். தனது திருமணம் குறித்த விஷயத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என பேசியது என்று அந்தப் பட்டியல் மிக நீளம்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக அவர் பேசியதும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பில் சில சர்ச்சைகள் இருந்தாலும் மேடை பேச்சில் ஒரு சாமானியத்தனம் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு.
கமல் ஹாசனின் யோசிக்க வைக்கும் பேச்சு: ஆனால் கமல் ஹாசனின் பத்திரிகையாளர் சந்திப்போ, மேடை பேச்சோ நேர்மாறானது. அவரது படங்கள் போலவே பேச்சும் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் உண்டு. அதேசமயம் பேச்சை புரிந்துகொண்டால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்றும் சிலர் கூறுவார்கள்.
மதன் பாப் பேட்டி: இந்நிலையில் ரஜினி, கமல் ஆகிய இருவர் குறித்தும் மதன் பாப் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவருமே பேட்டிகளில் நிறைய பேசுவதை பார்த்திருப்போம். உண்மையில் ரஜினிகாந்த் நிகழ்வுகளில் பேசுவதற்கு முதல் நாளே தயாராகிவிடுவார். என்னவெல்லாம் பேச வேண்டும் என்பதை தீர்மானித்து மனதில் அவற்றை ஏற்றிக்கொண்டு பேசுவார்.
கமல் அப்படி இல்லை: அதனால் ரஜினிகாந்த் பேசுவது நிதானமாக இருக்கும், ஆனால் கமல்ஹாசன் அப்படியில்லை. அந்த இடத்திலேயே என்ன பேச வேண்டும் என முடிவெடுத்து பேசுவார். இதனால் அடிக்கடி கமல்ஹாசன் பேசுவது என்னவென்று நமக்கு புரியாது. எனவே அந்த விசயத்தில் ரஜினி கொஞ்சம் புத்திசாலி” என்றார்.